Velu nachiyar history in Tamil - வேலு நாச்சியாரின் வீர வரலாறு
இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள 'சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி - கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார். முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச் சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப் படையின் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி கௌரி நாச்சியாரும், அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர். முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரைச் சமாதானம் செய்து, இழந்த சீமையை அவர்கள் எவ்வகையிலும் மீட்டுத் தருவதாக ராணிக்கு வாக்குறுதி வழங்கினர். கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், வெ ள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கல்லுக்கருகிலுள்ள விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தப்பிச் சென்றார். விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், விருப்பாட்சியில் அவர்கள் மிகப் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தகுந்த வசதிகளைச் செய்து கொடுத்தார். ஆற்காடு நவாபின் பிடியிலிருந்து இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மறவர் சீமைகளை விடுவித்து நவாபை விரட்டி அடிப்பதற்கு ராணி வேலுநாச்சியார் திண்டுக்கல்லில் தங்கியிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி கேட்டார். பிரதானி தாண்டவராயபிள்ளை 8-12-1772 வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு ஒரு கடிதமெழுதி ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால், அவர்களுடன் இணைந்து போரிட்டு, இரு சமஸ்தானங்களையும் நவாபிடமிருந்து கைப்பற்ற இயலுமென்று, அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பிள்ளையவர்கள் உடல் நலிவுற்று முதுமையின் காரணமாக படை உதவி கேட்ட ஆறு மாதங்களுக்குள் 1773ம் ஆண்டு இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார். பின்னர் வேலு நாச்சியார் தனது படைகளை 'சிவகங்கை பிரிவு”, 'திருப்புத்தூர் பிரிவு”, 'காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்புத்தூர் பிரிவிற்கு நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து வேலு நாச்சியார் அனுப்பி வைத்தார். வேலுநாச்சியார் அம்முப்படைப் பிரிவை அனுப்பி மும்முனைத் தாக்குதல் நடத்தி நவாபின் படைகளை எளிதில் வெற்றி கண்டார் ராணி வேலுநாச்சியார் ஹைதர் அலியின் படை உதவியை எதிர்பார்த்து, எட்டு ஆண்டுகள் விருப்பாட்சிப்பாளையத்தில் தங்கியிருந்தார். அவருக்குப் பக்கபலமாகப் பெரியமருதுவும், சின்னமருதுவும் துணையாக உடனிருந்தனர்.
No comments:
Post a Comment