-புதுமலர் பிரபாகரன்
வாழையடி வாழையென வாழ்கவென
பெரியவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன் உள்அர்த்தங்களை அறிந்து கொள்ளும்
முனைப்பின்றி கடந்து செல்பவர்களே அநேகம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ‘தலைமுறைகளின்’ வரலாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாகரீக உலகத்தின்
அடையாளம் என்று ‘பெற்ற தாய், தந்தையை’ கூட ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனமாக வாழத் துவங்கிவிட்ட இன்றைய சூழலில் தலைமுறைகளின்
வாழ்வியலும், அவர்களது கிளை உறவுகளும் தேவையற்ற சுமையாகிப்
போனதில் வியப்பில்லை. குடும்ப விழாக்களுக்கு பெயர் போட்டு அச்சடித்து வரும் நிறைய
பெரியவர்கள் ‘தனது உறவுமுறை’ சொல்லி
உங்க அய்யாவுக்கு தெரியும். உங்களுக்கு எங்க தெரியப்போகுது. வந்தா போனாத்தானே
தெரியும் என நொந்து கொள்வார்கள். காரைக்குடி பகுதி செட்டியார்கள் ஒவ்வொரு
குடும்பத்தினரும் பத்து பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.
நாம் அத்தகைய எவற்றையும்
ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை என்பதைவிட அறிந்துகொள்வது கூட இல்லை. ‘நம்முடைய பேரனுக்குப் பேரன்
நம்மை அறிந்திருக்க மாட்டான்’ என்பது எவ்வளவு கொடுமையானதோ, அதற்கு இணையானது நாம் நமது முன்னோர்களை அறிந்திராமல் வாழ்வது. இன்றைய
நாட்களில் ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கும் நபர்கள்
மிகக்குறைவே. எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிவிட்ட நிலையிலும், எனது சொந்த கிராமத்தினர் ‘கணேசத்தேவர் பேரன்’ என்றுதான் சொல்ல விரும்புகிறார்கள். நீதிமன்றங்களிலே உரக்கச் சொல்வது போல
‘நாகுத்தேவர் வகையறா’ என்றுதான்
பேசுகிறார்கள். ஆக, நானென்பது நானல்ல இந்த வகையறாக்கள் தான்
நான்! இவர்கள்தான் எனது ஆணிவேர். இவர்களது பழமையும்,
பெருமையும், குடும்ப முறைகளும் எனது குருதியிலே பதிந்து
கிடக்கிறது.
“தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை” என்று தமிழில் பழமொழி உண்டு. இதனை தொல்காப்பியரும் ‘பிள்ளை என்பவன் தந்தையின் மறு
அச்சு என்கிறார். (தந்தையர் ஒப்பர் மக்கள்- தொல்-1092) ஆக தந்தையின் பிரதியாகிப்
போன எனக்குள் ‘தந்தையின் தந்தையென’
ஆயிரம் தலைமுறைகளின் வாசம் அடிக்கவே செய்கிறது. மறத்தமிழர் சேனை இயக்கத்தின் மாநில
அமைப்பாளர் என்கிற முறையில் பல நேரங்களில் ‘கலப்பு
திருமணத்திற்கு எதிராக’ பதிவிட, பேச
நேர்கின்ற பொழுதுகளில் அகநானூறும், புறநானூறும் போற்றிப்
புகழ்ந்த இந்த சாதியின் பழைமையை சிதைக்க வரும் ‘தேவர் சாதி
தலைவர்கள்’ தங்களது சொந்த வரலாற்றை சொல்லிவிட்டு வாருங்கள்
என்பேன். அவர்களின் சொந்த வரலாறு எனும் குடும்ப வரலாறு என்பது இன்றளவும் அவர்களால்
சொல்ல முடியாததாகிவிட்டது. என்னுடைய கொடிவழியினையாவது யாவரும் அறிகிற வகையில்
படையலிட வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசைகளோடு கொடி வழி முன்னவர்களையும், கிராமத்தையும், சமூகத்தையும் அதன் வரலாற்று பழமை
மாறாமல் பாதுகாத்திடல் எமது கடமைகளில் ஒன்றாகிறது.