Saturday 11 June 2016

ரிபெல் சிலை திறப்பு - மறத்தமிழர் சேனை தொடர் போராட்டம்.



பெரிய மறவர் நாடு என வரலாறு போற்றும் இராமநாதபுரம் சீமையானது தனது வரலாற்றை செங்குருதியால் எழுதிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சாத பல மாமறவர்களை தந்திருக்கிறது. அப்படிதான் 1760 ஆம் வருடம் மார்ச்-30 இல் பிறந்த முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி தமது 12 வயதில் இராமநாதபுரம் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டப்பட்டவர் ஆவார். ஆங்கிலேயர்கள், நவாபுகளின் கட்டற்ற வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்கவரி விதித்தவர், அந்நிய மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக 2-06-1772 இல் தனது தாயார், சகோதரியோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாண்டுகள் சிறையிலேயே வாடிய மன்னரின் தாயார் சிறையிலேயே மரணமடைந்தார்.

மறவர் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதும் அஞ்சிய ஆங்கிலேயர்கள் 1782 இல் மன்னரை விடுதலை செய்தனர். மீண்டும் நல்லாட்சி செய்யத்துவங்கிய இவரது காலத்தில்தான் உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. அதனைப்போலவே கடுகு சந்தை, தேவிபட்டினம், கோட்டைப்பட்டிணம் அன்னசத்திரங்கள் கட்டப்பட்டன. ஆயிரமாயிரம் பரப்பளவு கொண்ட நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. மீண்டும் வலுவடையத் துவங்கிய மறவரது ஆட்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் மன்னரைக் கைது செய்து திருச்சி சிறையிலும், பின்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை வைத்த நிலையில் 1809 வருடம் ஜனவரி 23 ஆம் நாள் சென்னை சிறையிலேயே உயிர் துறந்த மாமன்னரை ரிபெல் என மக்கள் அழைக்கத் துவங்கினர்.


  இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக 1990 ஜனவரி 23 ஆம் நாள் தமிழக சட்டசபையில் 181 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களுக்கு இராமநாதபுரம் நகர் பகுதியில் சிலை நிறுவிட தமிழக அரசிடம் மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து 2010 ஜூலை மாதம் நடைபெற்ற மறவர் அரசியல் உரிமை மாநாட்டில் முதல் தீர்மானமாக நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  கடந்த 21.12.2010 அன்று அன்றைய திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தமிழக அரசு ரூ.4,51,620 ஒதுக்கீடு செய்து அரசாணை (அ.எண்:683) வெளியிட்டது. அதன்படி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக புல எண்.320-ல் எட்டு அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அமைக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி மாறியது.

ஆட்சி மாறியதும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தகவலறிந்த மறத்தமிழர் சேனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வந்தது. மாவட்ட நிர்வாகத்திடம் இப்படியொரு அரசாணை போடப்பட்டதற்கான சான்றுகள் இல்லையென்கிற பதில் தான் வந்தது. உடனே, இயக்கத்திடமிருந்த சான்றுகள் அனைத்தும் நகலெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டதோடு, சிலை அமைக்க பணத்தை உடனே ஒதுக்கீடு செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் மக்களைத்திரட்டி ஏப்-28-2012 அன்று இராமேஸ்வரம் நகரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

உடனே ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் சிலை அமைக்க ஆட்சியர் அலுவலகம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் 2012 அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட தேவரின இளைஞர்களுக்கு நீதி கேட்டு போராடிய மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் கைது செய்யப்பட்டு பின்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2013 மே மாதம் விடுதலையாகி வெளியே வந்தவுடன் நிறுவப்பட்ட ரிபெல் சிலையை திறக்க கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டு காலமாக சிலை திறப்பு இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பியிருந்த பதில் கடிதத்தில், உச்சநீதிமன்ற வழக்கு எண் 8519/2006 க்கு 18-01-2013 அன்று வழங்கிய இடைக்கால உத்தரவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பொது மற்றும் தனியார் இடங்களில் எந்த ஒரு நபருக்கும் புதிதாக சிலை நிறுவுதல் மற்றும் சிலை திறக்க அனுமதி அளித்தல் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் அதனால்தான் சிலை திறக்கப்படாமல் தாமதமாவதாக தகவல் சொல்லப்பட்டது.

இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்புதான் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை திறக்க இயலாமைக்கு காரணம் எனில் இந்தியா முழுவதும் 2013 க்கு பிறகு திறக்கப்பட்ட சிலைகளோடு தமிழகத்தில் திறக்கப்பட்ட சிலைகளையும் பட்டியலிட்டு மத்திய, மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், சபாநாயகர்கள், மாவட்ட ஆட்சியர்கள் எப்படி சிலைகளை திறந்தனர் என கேள்வி எழுப்பியதோடு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக முதல்வரின் தனிப்பிரிவில் மனு ( மனு எண்: 177950/14.09.15 )அளிக்கப்பட்டது’.

அதனைத் தொடர்ந்து மன்னரின் சிலையை திறக்க உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் வழக்கு (W.P(MD)No 17195/2015) தொடுத்தார். வழக்கு 23.09.15 அன்று நீதியரசர் ஆர்.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது மறத்தமிழர் சேனை சார்பில் வழக்கறிஞர் சே.ஜெய கார்த்திக் அவர்கள் ஆஜராகி தமது திறமையான வாதத்தை எடுத்து வைத்தார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழக வருவாய் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சி, நினைவகங்கள் துறை செயலாளர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


       இந்நிலையில், அரசுத்தரப்பில் வெகுவிரைவில் சிலை திறக்க முடிவெடுக்கப் பட்டிருப்பதாகவும், அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த நான்காம் தேதியே சிலை மூடப்பட்டிருந்த திரை விலக்கப்பட்டு சிலை பீடம், படிகளுக்கு வர்ணம் பூசும் பணி துவங்கியது.

       தமிழக அரசின் சார்பில் பிப்ரவரி-09-2016 அன்று சிலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த ரிபெல் சேதுபதி சிலை அலங்கரிக்கப்படிருந்தது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் காணொளி மூலம் காலை 11.00 மணியளவில் திறந்து வைத்தார். இராமநாதபுரத்தில் மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மாவட்ட செயலாளர் ம.உமாமகேஸ்வரன் அவர்கள், மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் ஆதி.முருகன் அவர்கள், பரமக்குடி ஒன்றிய செயலாளர் வ.முருகன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

       மேலும், இராமநாதபுரம் மன்னர் ந.குமரன் சேதுபதி அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா அவர்கள், முதுகுளத்தூர் நிலவள வங்கியின் தலைவரும் அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.தர்மர் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.சுந்தரபாண்டியன் அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.சி.ஆணிமுத்து அவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில செயலாளர் ஆ.ஆடலரசன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா மருது அவர்கள், நூர் முகமது அவர்கள், முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க நிர்வாகிகள், பசும்பொன் தேசிய கழகம் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி முரளி தேவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.  

ripel muththuramalinga sethupathi photo










No comments:

Post a Comment